புதுடில்லி: சபாஹார் துறைமுக மேம்பாட்டிற்கான நிதியை நடப்பு பட்ஜெட்டில் இந்தியா ஒதுக்காதது ஏமாற்றமளிப்பதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராச்சி தெரிவித்துள்ளார்.
2016 ஆம் ஆண்டு, ஈரானின் சபாஹார் துறைமுகத்தை பயன்படுத்த இந்தியா ஒப்பந்தம் செய்தது. ஷாஹித் பெஹெஷ்டி முனையத்தில் சரக்குகள் மற்றும் கன்டெய்னர்களை கையாள குறுகிய கால ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, அது ஆண்டுதோறும் புதுப்பிக்கப்பட்டது. பின்னர் 2024 ஆம் ஆண்டு, 10 ஆண்டுகளுக்கான நீண்டகால ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதுவரை துறைமுக பராமரிப்பிற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டுக்கான ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அமெரிக்கா ஈரான் மீது விதித்த பொருளாதார தடைகள் மற்றும் சபாஹார் பயன்பாட்டுக்கான விலக்கு திரும்பப் பெறப்பட்ட நிலைமை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், சபாஹார் துறைமுகம் இந்தியா, ஈரான், மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் முக்கிய தளமாக இருக்கும் என்று அராச்சி குறிப்பிட்டார். இதனை ‘கோல்டன் கேட்’ என விவரித்த அவர், முழுமையான மேம்பாடு மேற்கொள்ளப்பட்டால் அது முக்கிய போக்குவரத்து வழித்தடமாக அமையும் என்றார்.
