சென்னை: சைவம், வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து இழிவாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொன்முடி மார்ச் 24ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய போது, அவர் கூறிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. பல்வேறு தரப்பினரிடமிருந்து கண்டனங்கள் எழுந்ததையடுத்து, அவர் கட்சியின் துணை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதுடன், அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக பா.ஜ.கவுன்சிலர் உமா ஆனந்தன் சார்பில் தனிநபர் புகார் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில், மத உணர்வுகளை புண்படுத்துதல் மற்றும் வெறுப்பு தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டது.
இந்த மனு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட், பேச்சு வெறுப்பு பேச்சு வரம்பிற்குள் வருகிறது எனக் குறிப்பிட்டு, விசாரணைக்காக பொன்முடிக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.
