ஜெருசலேம்: ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டு நாள் அரசு முறை பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் இன்று இருதரப்பு உறவுகள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். பாதுகாப்பு, ராணுவத் தளவாடங்கள், வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல் அவிவ் அருகே உள்ள பென் குரியான் விமான நிலையத்தில் தரையிறங்கிய பிரதமர் மோடியை, நெதன்யாகு மற்றும் அவரது மனைவி சாரா நேரில் வந்து ஆரத்தழுவி வரவேற்றனர். ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் சிவப்பு கம்பள வரவேற்பும் அளிக்கப்பட்டது.
விமான நிலையத்திலேயே இருவரும் தனிப்பட்ட சந்திப்பு நடத்தி, அறிவியல், தொழில்நுட்பம், நீர் மேலாண்மை, விவசாயம், பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசித்தனர். சமூக வலைதள பதிவில், இரு நாடுகளின் உறவு புதிய உயரத்தை எட்டும் என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
ராணுவ ஒத்துழைப்பில், வான் பாதுகாப்பு மற்றும் ஏவுகணை தொடர்பான தொழில்நுட்ப பரிமாற்றம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுகள் அடுத்த கட்டத்திற்கு நகரும் வாய்ப்பும் உள்ளது.
இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக்கையும் பிரதமர் மோடி சந்திக்க உள்ளார்.
இந்நிலையில், ‘ஜெருசலேம் போஸ்ட்’ நாளிதழ் பிரதமர் மோடியை வரவேற்கும் வகையில் முதல் பக்க செய்தி வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் பார்லிமென்ட் வளாகமும் இந்திய தேசியக் கொடியின் மூவர்ண விளக்கில் ஒளிர்ந்தது.
ஜெருசலேம் நகரில் தங்கியிருந்த பிரதமருக்காக இந்திய வம்சாவளியினர் கலாசார நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்தனர்.
