கன்னியாகுமரி: தமிழகம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து ஆளப்படும்; டில்லியில் இருந்து ஆளப்படும் நிலை ஏற்படக் கூடாது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் பல்வேறு அரசு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து பேசிய அவர், குமரி மாவட்டத்தின் பண்பாட்டு சிறப்பையும் வரலாற்றுப் பெருமையையும் குறிப்பிட்டார். சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவக் குடும்பங்களுக்கு கட்டிய வீடுகளுக்கு வரன்முறைப்பட்ட பட்டா வழங்கப்படுவதாகவும், புதிய துறைமுகம் மற்றும் மீன்பிடி துறைமுக விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
மக்கள் வழங்கிய ஆட்சிப் பொறுப்பை முழுமையாக நிறைவேற்ற உழைத்து வருவதாக கூறிய அவர், தேர்தல் நேரத்தில் மட்டுமே சிலர் மக்களை அணுகுவார்கள் என்றார். பிரதமர் அடிக்கடி தமிழகம் வருவது கூட்டணி கட்சிகளுக்கே சவாலாக மாறும் எனவும் தெரிவித்தார்.
தமிழகம் குறித்து குறை கூறும் பா.ஜ.க. தலைவர்கள் வளர்ச்சி குறித்து பேச வேண்டும் என்றும், வெறுப்பு அரசியலை விட்டு விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினார். எதிர்க்கட்சி தலைவர் குறித்து விமர்சனமும் முன்வைத்தார்.
வரவிருக்கும் தேர்தல், தமிழகத்தை யார் ஆள வேண்டும் என்பதை தீர்மானிக்கும் முக்கியமான ஒன்றாக இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.
