சென்னை: பயங்கரவாதத்தை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் ‘பிரஹார்’ என்ற கொள்கையை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அல்-குவைதா, ஐ.எஸ். போன்ற அமைப்புகளுக்கு ஆட்களை சேர்க்கும் ‘ஸ்லீப்பர் செல்’களை தீவிரமாக கண்காணிக்க மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பயங்கரவாத நடவடிக்கைகளைத் தடுப்பது, பதிலடி கொடுப்பது, அரசு அமைப்புகளை ஒருங்கிணைப்பது, பயங்கரவாத நிதி ஆதாரங்களை முறியடிப்பது, சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துவது உள்ளிட்ட ஏழு முக்கிய அம்சங்கள் இந்த கொள்கையில் வரையறுக்கப்பட்டுள்ளன.
இந்த அடிப்படையில் ‘பிரஹார்’ எனப்படும் நாட்டின் முதல் பயங்கரவாத எதிர்ப்பு கொள்கையை உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ‘பிரஹார்’ என்பதற்கு தமிழில் ‘தாக்குதல்’ என்று பொருள்.
மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், சதித் திட்டங்களுக்கு ஆட்களை சேர்த்தல், நிதி மற்றும் ஆயுதங்களை திரட்டுதல் போன்ற செயல்களில் பயங்கரவாத அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக சமூக வலைதளங்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் செயல்படும் அல்-குவைதா, ஐ.எஸ். போன்ற அமைப்புகள் ‘ஸ்லீப்பர் செல்’ எனப்படும் ரகசிய பிரிவுகள் மூலம் ஆட்கள் சேர்க்கும் பணிகளில் ஈடுபடுகின்றன என்றும் கூறப்பட்டுள்ளது.
இதனை தீவிரமாக கண்காணித்து தடுக்க வேண்டும் என்றும், அதற்காக மத்திய புலனாய்வு அமைப்புகளும் மாநில போலீசாரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாத அமைப்புகள் தொடர்பான தகவல்களை பரிமாறிக் கொண்டு, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
