ஹைதராபாத்: அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்காக மட்டும் தெலங்கானா அரசின் மாதாந்திர செலவு ரூ.6000 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2014ஆம் ஆண்டு உருவான தெலங்கானா மாநிலத்தின் ஆரம்பகால சம்பளம் மற்றும் ஓய்வூதியச் செலவுகளை தற்போதைய செலவுகளுடன் ஒப்பிடுகையில், இது நான்கு மடங்கு உயர்ந்துள்ளதாக மூத்த அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர். தற்போது சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்காக மட்டும் மாதந்தோறும் ரூ.6000 கோடியை அரசு ஒதுக்குகிறது.
அதிக சம்பளம் பெறும் பணியாளர்களில் மின்சாரத் துறையின் தலைமைப் பொறியாளர்கள் மாதம் ரூ.7 லட்சம் வரை ஊதியம் பெறுகின்றனர். ஹைதராபாத் மாநகராட்சியில் நீண்ட காலமாக பணியாற்றும் மூத்த தூய்மைப் பணியாளர்கள் மாதம் ரூ.2 லட்சம் வரை சம்பளம் பெறுகின்றனர். மேலும், அங்கு முறைப்படுத்தப்பட்ட தூய்மைப் பணியாளர்களின் சராசரி ஊதியம் ரூ.70,000 என குறிப்பிடப்படுகிறது.
குரூப் 1 மூத்த அதிகாரிகள் ரூ.80,000 முதல் ரூ.1.50 லட்சம் வரை, குரூப் 2 நடுத்தர நிலை அதிகாரிகள் ரூ.60,000 முதல் ரூ.1.20 லட்சம் வரை சம்பளம் பெறுகின்றனர். குரூப் 3 தொழில்நுட்ப மற்றும் கிளார்க்குகள் ரூ.45,000 முதல் ரூ.1 லட்சம் வரை, குரூப் 4 உதவிப் பணியாளர்கள் ரூ.35,000 முதல் ரூ.50,000 வரை ஊதியம் பெறுகின்றனர்.
சிஏஜி அறிக்கையின் படி, 2023-24 நிதியாண்டில் மாநில வருவாயில் 45 சதவீதம் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் கடன் வட்டி செலுத்துவதற்கே பயன்படுத்தப்பட்டுள்ளது.
தெலங்கானாவில் தற்போது ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
