பாட்னா: நாட்டை முழுமையாக ஊடுருவல்காரர்களிடமிருந்து பாதுகாக்க பிரதமர் மோடி தலைமையிலான அரசு உறுதியாக செயல்படுகிறது என்று பீஹாரில் பாதுகாப்பு படையினர் மத்தியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
நேபாளம் மற்றும் பூட்டான் எல்லைகளை காக்கும் எஸ்எஸ்பி இந்திய பாதுகாப்பு படையினருடன் அவர் உரையாற்றினார். அப்போது, இன்று சாவர்க்கரின் நினைவு நாள் எனக் குறிப்பிட்டார். சாவர்க்கர் சுதந்திரப் போராட்டத்தில் சிறப்பான வீரராக விளங்கியவர் என்றும், தனது இலக்கிய படைப்புகள் மூலம் தேசபக்தி உணர்வை நாட்டில் பரப்பியவர் என்றும் கூறினார். தீண்டாமை ஒழிப்பு மற்றும் தேசியவாத எண்ணங்களில் அவர் செய்த பங்களிப்பை நினைவுகூர்ந்து, தேசத்தின் சார்பில் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
எல்லைப் பாதுகாவலர்களாகவும், கலாசார தூதுவர்களாகவும் பணியாற்றும் சாஸ்த்ர சீமா பல் வீரர்களுடன் இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்தார். இந்தப் பகுதியில் சுமார் ரூ.170 கோடி மதிப்பிலான புதிய கட்டடங்கள் மற்றும் பல்வேறு வசதிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இவை பணியில் எதிர்கொள்ளும் சவால்களை குறைக்க உதவும் என நம்பிக்கை தெரிவித்தார்.
ஊடுருவல்காரர்களை நீக்குவது என்பது வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை அகற்றுவது மட்டும் அல்ல என்றும், இந்திய மண்ணிலிருந்து ஒவ்வொருவரையும் வெளியேற்ற திட்டமிட்டு செயல்படுவோம் என்றும் கூறினார். முழு நாட்டையும் ஊடுருவல்காரர்களிடமிருந்து விடுவிக்க மோடி அரசு உறுதி பூண்டுள்ளதாக அவர் வலியுறுத்தினார்.
பீஹாரில் நேபாளம் மற்றும் வங்கதேச எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் ஊடுருவல் தடுப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். அண்டை நாடுகளை பயன்படுத்தி தேச விரோத சக்திகள் இந்தியாவுக்குள் நுழைய முயற்சிக்கும் வாய்ப்பு இருப்பதால், எல்லைப் பாதுகாப்பு படையினர் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
