புதுடில்லி: கேரளாவின் பெயரை ‘கேரளம்’ என மாற்றுவது, மாநிலத்தின் பாரம்பரியத்தையும் அசல் தன்மையையும் வெளிப்படுத்தும் முக்கியமான நடவடிக்கையாகும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சரவை இந்த பெயர் மாற்றத்திற்கு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட பதிவில், கேரள மக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். மாநில சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்படுவதாகவும் விளக்கினார்.
மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை அடுத்து, ‘கேரளம் (பெயர் மாற்றம்) மசோதா, 2026’ கொண்டு வரப்படும் என்றும், இது அரசியலமைப்பின் 3-வது பிரிவின் கீழ் ஜனாதிபதி பரிந்துரையுடன் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், ‘வளர்ந்த பாரதத்தை’ உருவாக்க ‘வளர்ந்த கேரளம்’ அவசியம் என வலியுறுத்திய அவர், தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா, உற்பத்தித் துறைகளில் கவனம் செலுத்துதல் முக்கியம் என்றார். அதேபோல், உள்நாட்டு அச்சுறுத்தல்களை களைந்து பாதுகாப்பான சூழலை உருவாக்குதல் மற்றும் மத உணர்வுகளை பாதுகாக்கும் வகையில் நடுநிலையான விசாரணைகள் அவசியம் என்றும் குறிப்பிட்டார்.
கேரள மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்த அவர், பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை எடுத்துள்ள இந்த முடிவு, மாநில மக்களின் நீண்டநாள் விருப்பத்தை நிறைவேற்றும் குறிப்பிடத்தக்க படியாகும் என்றார்.
