புதுடில்லி: கேரள மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என மாற்றுவதற்கு, பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பில் உள்ள அனைத்து மொழிகளிலும் மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என மாற்ற வேண்டும் என வலியுறுத்தி, கேரள சட்டசபையில் கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் முதல்வர் பினராயி விஜயன் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் அது மத்திய அரசால் திருப்பி அனுப்பப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என மாற்ற வேண்டும் என வலியுறுத்தி, 2024ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மீண்டும் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில், சேவா தீர்த் வளாகத்தில் முதல் முறையாக நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், கேரளாவின் பெயரை ‘கேரளம்’ என மாற்றுவதற்கு அதிகாரப்பூர்வ ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
