முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், எந்த சூழ்நிலையிலும் தனிக்கட்சி தொடங்க மாட்டேன் என்று தெளிவாக தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் போடியில் நிருபர்களிடம் பேசிய அவர், அதிமுகவை வெல்ல முடியாத இயக்கமாக மாற்றியவர் ஜெயலலிதா என்றும், 2001ல் ஏற்பட்ட சவாலான சூழலில் தன்னை முதல்வராக நியமித்ததை நினைவுகூர்ந்தார். அவரின் கட்டளையை ஏற்று பொறுப்பை நிறைவேற்றியதாக கூறினார்.
ஜெயலலிதா மறைந்த பிறகு முதல்வர் பதவியை விரும்பவில்லை என்றாலும், கட்டாயத்தின் அடிப்படையில் பொறுப்பேற்றதாகவும், கட்சியின் ஒருங்கிணைப்பை மட்டும் தான் வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார். ஒருங்கிணைப்பாளர் அல்லது பதவிகள் எதையும் தாம் கோரவில்லை என்றும், 1980 முதல் கட்சிக்காக உழைத்த வரலாற்றில் தன் உழைப்புக்கு குற்றம் சாட்ட முடியாது என்றார்.
துணை முதல்வர் பதவி வேண்டாம் என்று கூறிய போதும், பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் அமைச்சரவையில் இணைந்ததாகவும், பல அவமரியாதைகளை பொறுத்துக் கொண்டதாகவும் கூறினார். கட்சியின் சட்ட விதிகள் மாற்றப்பட்டபோது தான் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், அதனைத் தொடர்ந்து சட்டப் போராட்டம் நடைபெற்று வருவதாகவும் விளக்கினார்.
தாம் தொடங்கிய கழகம், அதிமுகவின் உரிமையை மீட்டெடுப்பதற்காக மட்டுமே என்றும், உறுப்பினர்கள் சேர்க்கப்படவில்லை என்றும் கூறினார். கடந்த காலத்தில் தனிக்கட்சி தொடங்குமாறு ஆலோசனைகள் வந்தபோதும் அதை நிராகரித்ததாக தெரிவித்தார்.
அரசியல் சூழல்கள், கூட்டணி பேச்சுவார்த்தைகள் மற்றும் கடந்த தேர்தல் அனுபவங்கள் குறித்து பல்வேறு குறிப்புகளை வெளியிட்ட அவர், கட்சி பிளவுபட்டிருப்பது மக்கள் விருப்பத்திற்கு எதிரானது என்றும், ஒருங்கிணைப்பு அவசியம் என்றும் மீண்டும் வலியுறுத்தினார்.
டிடிவி தினகரன் மீது மரியாதை இருப்பதாக கூறிய ஓபிஎஸ், அரசியல் நாகரிகத்தை கருத்தில் கொண்டு தாம் கட்டுப்பாட்டுடன் பேசுவதாகவும் தெரிவித்தார்.
