நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும்; இது சமூகத்தை ஒன்றிணைப்பதற்கு இன்றியமையாதது என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் அமைப்பின் 100வது ஆண்டு நிகழ்வை ஒட்டி முன்னாள் ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடிய போது அவர் இதை கூறினார். பொது சிவில் சட்டம் செயல்படுத்தப்பட்டால் அது நல்ல முன்னேற்றமாக அமையும். உத்தராகண்டில் நடைமுறையில் உள்ளதைப் போலவே, நாடு முழுவதும் இந்த சட்டம் அமலாக வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
உத்தராகண்டில் சட்டத்தை அமல்படுத்தும் முன் விரிவான விவாதங்கள் நடைபெற்றன. சுமார் 3 லட்சம் மக்களிடமிருந்து பரிந்துரைகள் பெறப்பட்டு அவை அனைத்தும் ஆராயப்பட்டதாக மோகன் பாகவத் குறிப்பிட்டார்.
உயர்கல்வி நிறுவனங்களில் ஜாதி அடிப்படையிலான பாகுபாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் யுஜிசி விதிமுறைகள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது குறித்து கருத்து தெரிவிக்க அவர் மறுத்தார். அந்த விவகாரம் தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக தெரிவித்தார்.
உத்தராகண்ட் மாநிலத்தில், முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான ஆட்சி செயல்பட்டு வருகிறது. 2022 சட்டசபை தேர்தலின் போது வழங்கப்பட்ட வாக்குறுதியின்படி, 2025 ஜனவரி மாதம் முதல் பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
