பாட்னா: பீஹாரில் வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு அருகே இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்ய தடை விதிக்க மாநில அரசு முடிவு எடுத்துள்ளது.
இது குறித்து மாநில துணை முதல்வர் விஜய்குமார் சின்ஹா கூறுகையில், இது அரசின் புதிய முயற்சிகளில் ஒன்று என்றும், பீஹார் மாறி வருகிறது என்பதற்கான அடையாளம் என்றும் தெரிவித்தார்.
மேலும், சுகாதாரத்தை பாதுகாப்பதும், சமூக நல்லிணக்கத்தை உறுதி செய்வதும் இந்த முடிவின் முக்கிய நோக்கம் என விளக்கினார். உணவு தொடர்பாக எந்த ஒரு பிரச்னையும் அரசுக்கு இல்லை என்றும், யாருடைய உணர்வுகளும் அல்லது சுற்றுச்சூழலும் பாதிக்கப்படக் கூடாது என்பதே அரசின் எண்ணம் என்றும் கூறினார்.
இந்த நடவடிக்கை எந்த ஒரு சமூகத்தையோ அல்லது உணவு பழக்கத்தையோ குறிவைத்து எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்றும், பொதுமக்கள் இதனை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதற்கு முன், 2017ம் ஆண்டு உத்தரப் பிரதேச அரசும் வழிபாட்டுத்தலங்களுக்கு அருகில் இறைச்சி விற்பனைக்கு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
