புதுடில்லி: ‘PRAHAAR’ என்ற தலைப்பில் பயங்கரவாதத்துக்கு எதிராக உருவாக்கப்பட்ட தேசிய கொள்கையின் சாராம்சத்தை மத்திய உள்துறை அமைச்சகம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்துடன் மட்டுமல்லாது, கிரிமினல் ஹேக்கர்கள் மற்றும் சைபர் தாக்குதல் மூலம் இந்தியாவை குறிவைக்கும் நபர்கள் மற்றும் குழுக்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீர், நிலம், வான் உள்ளிட்ட அனைத்து பரப்பிலும் இந்தியா பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது எனவும், மின்சாரம், ரயில்வே, விமான நிலையங்கள், துறைமுகங்கள், பாதுகாப்பு மற்றும் அணுசக்தி நிலையங்கள் போன்ற பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த துறைகளை பாதுகாக்க இந்தியாவுக்கு திறன் உள்ளது எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியா எந்தவொரு குறிப்பிட்ட மதம், இனம் அல்லது நாகரிகத்துடனும் பயங்கரவாதத்தை இணைக்கவில்லை. இருப்பினும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் நாடு பாதிக்கப்பட்டுள்ளது. ஜிகாதி அமைப்புகள் மற்றும் சர்வதேச பயங்கரவாத குழுக்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டுகின்றன.
அல் கொய்தா, ஐஎஸ்ஐஎஸ் உள்ளிட்ட அமைப்புகள் ஸ்லீப்பர் செல் மூலம் வன்முறையை தூண்ட முயற்சிக்கின்றன. வெளிநாடுகளை தளமாகக் கொண்ட பிரிவினைவாத குழுக்கள், உள்ளூர் கட்டமைப்புகளை பயன்படுத்தி பயங்கரவாதத்தை ஊக்குவிக்க முயற்சிப்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் டிரோன்கள் போன்ற அதிநவீன தொழில்நுட்பங்கள் சட்டவிரோதமாக பயன்படுத்தப்படுகின்றன. பயங்கரவாத அமைப்புகள் ஆட்கள் சேர்த்தல் மற்றும் தளவாடங்கள் குவித்தல் நோக்கில் கிரிமினல் நெட்வொர்க்குகளை உருவாக்குகின்றன.
டார்க் வெப், கிரிப்டோ உள்ளிட்ட டிஜிட்டல் தளங்கள் மூலம் கொள்கைகள் பரப்புதல் மற்றும் நிதி திரட்டுதல் நடைபெறுவது சவாலாக உள்ளது. ரசாயனம், உயிரியல், ரேடியோலாஜிக்கல், அணுசக்தி மற்றும் டிஜிட்டல் வளங்கள் பயங்கரவாதிகளுக்கு கிடைக்காமல் தடுப்பது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
பயங்கரவாத வழக்குகளை வலுப்படுத்த, எப்ஐஆர் பதிவு முதல் வழக்கு முடிவு வரை விசாரணையின் அனைத்து கட்டங்களிலும் சட்ட நிபுணர்களை இணைக்க வேண்டும் எனவும், நாடு கடந்த பயங்கரவாதத்தை எதிர்கொள்ள சர்வதேச மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் எனவும் கொள்கை கூறுகிறது.
இந்திய இளைஞர்களை பிரிவினைவாத செயல்களில் ஈடுபடுத்த பயங்கரவாத அமைப்புகள் முயற்சிக்கின்றன. அடையாளம் காணப்பட்ட உடன் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக உடனடி சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
பிரிவினைவாதம் மற்றும் பயங்கரவாதத்தின் பின்விளைவுகள் குறித்து தொண்டு நிறுவனங்கள் மற்றும் மதபோதகர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
