வேலூர்: வேலூரில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில், தவெக தலைவர் விஜய், திமுக மற்றும் முதல்வர் ஸ்டாலின் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
அவர் பேசுகையில், “மக்களை நேசிக்கும் நல்ல தலைமை இல்லாததால், பல ஆண்டுகளாக வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் மக்கள் ஏமாந்துள்ளனர். அதற்கான மாற்றாக தவெக உருவானது,” என்றார்.
வரும் சட்டசபை தேர்தலை தமிழகத்திற்கும் டில்லிக்கும் இடையேயான தேர்தலாக சித்தரிப்பது குறித்து கேள்வி எழுப்பிய அவர், “இது மாநில தேர்தல்; எந்த தேர்தலை எப்படி அணுக வேண்டும் என்பது தமிழக மக்களுக்கு தெளிவாக தெரியும்,” என கூறினார்.
மேலும், “இந்த தேர்தல், தமிழக மக்களுக்கும் ஊழல் மற்றும் லஞ்சத்திற்கு இடையேயான போராட்டமாகும். நிர்வாக குறைபாடுகள் மற்றும் ஆட்சிச் செயல்பாடுகள் குறித்து மக்கள் தீர்ப்பு வழங்குவார்கள்,” என்றார்.
கூட்டணி அரசியல் தொடர்பாக அவர் விமர்சனம் செய்து, “கொள்ளையடித்த பணத்தை பயன்படுத்தி கட்சிகளை கூட்டணியில் இணைக்க முயற்சி நடைபெறுகிறது. அதனை ‘கல்லாப்பெட்டி கூட்டணி’ என நான் குறிப்பிடுகிறேன்,” என்றார்.
அரசியல் மற்றும் சொத்து வெளிப்படைத் தன்மை குறித்து கருத்து தெரிவித்த அவர், “அரசியலுக்கு வந்த பின் சொத்து விவரங்களை திறந்தவெளியில் வெளியிட முடியுமா?” என கேள்வி எழுப்பினார்.
இறுதியாக, “இந்த தேர்தலில் போட்டி முக்கியமாக இரண்டு தரப்புகளுக்கிடையே தான் அமையும். மக்களுடனான உறவை யாராலும் பிரிக்க முடியாது,” என விஜய் தெரிவித்தார்.
கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு, கல்வி, பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு உள்ளிட்ட பல அம்சங்களில் தவெக அரசின் முன்னுரிமைகள் குறித்தும் விஜய் வாக்குறுதிகள் அளித்தார்.
