குவஹாத்தியில் நடைபெற்ற 87வது CRPF தின அணிவகுப்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று உரையாற்றினார். மத்திய அரசு நிர்ணயித்துள்ள காலக்கெடு மார்ச் 31க்குள் இந்தியா நக்சல்கள் இல்லாத நாடாக மாறும் என அவர் உறுதி அளித்தார்.
ஜம்மு காஷ்மீரில் கல்வீச்சு சம்பவங்கள் பூஜ்ஜியமாகக் குறைந்துள்ளதாகவும், மணிப்பூரில் இன வன்முறையை கையாளவும், நக்சலைட்டுகளின் முதுகெலும்பை உடைக்கவும் பாதுகாப்பு படைகள் முக்கிய பங்கு வகித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். கடந்த மூன்று ஆண்டுகளில் CRPF ஆற்றிய பங்களிப்பு குறிப்பிடத்தக்கது என பாராட்டினார்.
சத்தீஸ்கர் – தெலுங்கானா எல்லையில் உள்ள கர்ரெகுடா மலைப்பகுதியில் 21 நாள் நீடித்த ‘ஆபரேஷன் பிளாக் பாரஸ்ட்’ நடவடிக்கையில் 31 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதாகவும், கடும் வெப்பநிலையிலும் CRPF வீரர்கள் துணிச்சலுடன் செயல்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
10–11 ஆண்டுகளுக்கு முன் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம், நக்சலிசம் மற்றும் வடகிழக்கில் கிளர்ச்சி நிலவியதாகவும், தற்போது அமைதியான சூழல் உருவாகியுள்ளதாகவும் அமித் ஷா தெரிவித்தார். நாட்டிலிருந்து நக்சலிசம் முற்றிலும் ஒழிக்கப்படும் என்பதை CRPF வீரர்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையில் கூறுவதாகவும் அவர் வலியுறுத்தினார்.
