பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், திருப்பூரில் வசித்து வந்த 6 வங்கதேசத்தவரை டில்லி போலீசார் இன்று கைது செய்தனர்.
டில்லி செங்கோட்டை குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய கருத்து பதிவுகள் குறித்து போலீசார் கண்காணிப்பு மேற்கொண்டு வந்தனர். அதன்படி, திருப்பூரில் இருந்து சிலர் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக பதிவிட்டதை டில்லி போலீசார் கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து திருப்பூர் வந்த போலீசார் பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ஊத்துக்குளி பகுதியில் 2 பேர், பல்லடத்தில் 3 பேர், திருமுருகன்பூண்டியில் ஒருவர் என மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவித்தனர்.
மேலும், கைது செய்யப்பட்டவர்களில் சிலர் போலி ஆவணங்களை பயன்படுத்தி சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்திருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட நபர்களிடம் செங்கோட்டை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
