விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், ‘ஆட்சி அதிகாரத்தில் பங்கு’ குறித்து தொடர்ந்து கருத்து வெளியிட்டு வந்தார். இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் பொதுச்செயலர் வேணுகோபால் சமீபத்தில் சென்னை வருகையின் போது, ‘ஆட்சியில் பங்கு’ கோஷம் கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு அல்ல என விளக்கி, கூட்டணி தொடர்பான விஷயங்களில் பொதுவெளியில் கருத்து தெரிவிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தார்.
இதற்குப் பிறகு, இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தரப்பில் வெளிப்படையான கருத்துக்கள் சற்று குறைந்தன.
இந்நிலையில், மதுரை மாவட்ட காங்கிரஸ் சார்பில் கூத்தியார் குண்டு சக்கரவர்த்தி அம்பலம் என்பவர், நகரின் பல பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளார். அந்த போஸ்டர்களில் இடம்பெற்ற வாசகங்கள் அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்தன.
‘வெள்ளைக்காரனையே விரட்டிய காங்கிரஸ்; இந்த கொள்ளைக்காரனிடம் அடிபணிவோமா?’ என்ற வாசகத்துடன் அச்சிடப்பட்ட போஸ்டர்களில், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல், சோனியா மற்றும் மாணிக்கம் தாகூர் ஆகியோரின் படங்கள் இடம்பெற்றிருந்தன.
இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்ட சில மணி நேரங்களிலேயே, ஒரு தரப்பினரால் கிழிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போஸ்டர் விவகாரம் காரணமாக, உள்ளூர் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு மற்றும் விவாதம் ஏற்பட்டுள்ளது.
