மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடர்பான வழக்கில், சுப்ரீம் கோர்ட் முக்கிய இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.
எஸ்.ஐ.ஆர். பணிகளை மேற்பார்வையிட, பணியில் உள்ள அல்லது ஓய்வு பெற்ற கூடுதல் மாவட்ட நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்தது. மேற்கு வங்க அரசு மற்றும் தேர்தல் கமிஷன் இடையே நிலவும் நம்பிக்கையற்ற சூழலை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமர்வு குறிப்பிட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், எஸ்.ஐ.ஆர். பணிகளை விரைந்து மற்றும் வெளிப்படையாக நிறைவு செய்வதே தற்போதைய முன்னுரிமை என நீதிமன்றம் தெரிவித்தது.
கொல்கட்டா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, மாவட்ட வாரியாக கூடுதல் மாவட்ட நீதிபதிகளை நியமிக்க வேண்டும். இவர்கள், வாக்காளர் பெயர்கள் நீக்கம் அல்லது விடுபட்டது தொடர்பான புகார்களை ஆய்வு செய்து இறுதி முடிவு எடுப்பர்.
இந்த பணிகளில் தேர்தல் கமிஷன் நுண் பார்வையாளர்கள் மற்றும் மாநில அரசு அதிகாரிகள் உதவி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. நீதித்துறை அதிகாரிகள் பணியில் ஈடுபடுவதால் வழக்குகள் தேக்கமடையும் சூழல் உருவாகலாம் என்பதால், அவசர வழக்குகளை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை உயர் நீதிமன்ற பதிவாளர் மேற்கொள்ள வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.
மேலும், பணியில் ஈடுபடும் நீதித்துறை அதிகாரிகளுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இறுதி வாக்காளர் பட்டியல் திட்டமிட்டபடி வெளியிட அனுமதி வழங்கப்பட்டாலும், சரிபார்க்கப்படும் பெயர்கள் பின்னர் துணைப் பட்டியலாக வெளியிடப்படும் என நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
