மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் எஸ்ஐஆர் பணிகள் தொடர்பாக தேர்தல் கமிஷன் மற்றும் மாநில அரசுக்கு இடையே உருவான மோதல் குறித்து சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.
வழக்கின் விசாரணையின் போது, அரசியல் சாசன அமைப்புகள் இடையே நம்பிக்கை பற்றாக்குறை ஏற்பட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது என நீதிமன்றம் குறிப்பிட்டது. மாநில அரசு மற்றும் தேர்தல் கமிஷன் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளுக்கிடையில் பொதுமக்கள் சிக்கிக் கொண்டுள்ளனர் எனவும் தெரிவித்தது.
எஸ்ஐஆர் பணிகளை முன்னெடுக்க, மாவட்ட நீதிபதி பதவியில் உள்ள நீதிபதிகளை நியமிக்க கோல்கட்டா ஐகோர்ட் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியது. அசாதாரண சூழ்நிலை காரணமாக அசாதாரண உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், எஸ்ஐஆர் பணிகளில் எஸ்டிஓ, எஸ்டிஎம் பொறுப்புகளுக்கு குரூப் ஏ பிரிவு அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியது. வாக்காளர் பதிவு அதிகாரி நியமனங்களில் மாநில அரசு சார்பில் தேர்வு செய்யப்படும் அதிகாரிகள் குறித்து பிரச்னைகள் எழுந்தாலும், தேர்தல் கமிஷன் நியமித்த அதிகாரிகளின் பதவி தொடர்பாக நீதிமன்றம் முடிவு செய்ய முடியாது என தெளிவுபடுத்தியது.
சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் உண்மைத்தன்மையை உறுதி செய்வது, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் போன்ற பணிகளுக்காக மாவட்ட நீதிபதி அல்லது கூடுதல் நீதிபதி அந்தஸ்தில் உள்ளவர்கள் அல்லது முன்னாள் நீதிபதிகளை நியமிக்க கோல்கட்டா ஐகோர்ட் தலைமை நீதிபதியிடம் கேட்டுக்கொண்டது.
இந்த விவகாரத்தில் அரசியல் சாசன அமைப்புகள் இடையே ஒத்துழைப்பு அவசியம் என்றும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
