பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளர் சங்கம் சார்பில் சென்னையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. சைதாப்பேட்டையில் பனகல் மாளிகை அருகே நடைபெற்ற போராட்டத்தில், வி.சி. தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
கடந்த ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றோர், காலிப்பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு கிராம உதவியாளர்கள் கூட்டமைப்பு சங்கம் சார்பில், காலமுறை ஊதியம் வழங்க கோரி எழிலகம் வளாகத்தில் 500க்கும் மேற்பட்டோர் நுாதன முறையில் ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர். இதே கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் கருப்பு பேட்ஜ் அணிந்து காத்திருப்பு போராட்டம் தொடங்கப்பட்டது.
தமிழ்நாடு மின் வாரியத்தில் 25 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க கோரி கோயம்பேட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அம்பேத்கர் சிலை முன்பு திரண்ட ஊழியர்கள் கோஷங்கள் எழுப்பினர். சிலர் மேம்பாலம் மற்றும் மின்விளக்கு கம்பம் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டனர். போராட்டத்தில் பங்கேற்ற மூவர் மயக்கமடைந்த நிலையில், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பொது வினியோக திட்டத்திற்கு தனித்துறை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சேப்பாக்கத்தில் அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் ஊராட்சி செயலர்கள் போராட்டங்களை வாபஸ் பெற்றனர். தற்செயல் விடுப்பு போராட்டத்தை கைவிடுவதாக சார்-பதிவாளர்கள் சங்கமும் அறிவித்தது.
