புதுடில்லி: தமிழ்நாடு வக்ப் வாரியம் செயல்பட சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்திருந்த இடைக்கால தடை உத்தரவை, உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
வக்ப் சட்ட விதிகள் முறையாக பின்பற்றப்படாமல் வாரிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி, வழக்கறிஞர் சவுகத் அலி முகமது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவில், வாரியத்தில் முஸ்லிம் அல்லாத உறுப்பினர்கள் நியமனம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகள் கடைப்பிடிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, தமிழ்நாடு வக்ப் வாரியம் செயல்பட இடைக்கால தடை விதித்தது. இதை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடந்தபோது, தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், வாரியத்தில் ஏற்கனவே எட்டு பேர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் மூன்று பேர் நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தல் நடைபெற்று வருவதால், எஞ்சிய நியமனங்கள் பின்னர் செய்யப்படும் என விளக்கமளிக்கப்பட்டது.
இந்த வாதங்களை கருத்தில் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது. மேலும், நியமிக்கப்படவுள்ள மூன்று உறுப்பினர்கள் குறித்து அடுத்த விசாரணையில் தெரிவிக்க வேண்டும் எனக் கூறி வழக்கை ஒத்திவைத்தது.
