ஏஐ துறையில் இந்தியா முன்னேற்றம் வியப்பூட்டும்: சாம் ஆல்ட்மென்
புதுடில்லி: ஏஐ துறையில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றம் வியக்கத்தக்கது என, ஓபன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மென் தெரிவித்தார்.
டில்லியில் நடைபெற்ற ஏஐ மாநாட்டில் அவர் பேசியதாவது: கடந்த ஓராண்டுக்கு முன்பு இங்கு வந்தேன். அதற்கு பிறகு பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. உயர்நிலை படிப்புகளில் கணிதத்தில் சிரமப்பட்டவர்கள், தற்போது ஏஐ உதவியுடன் ஆராய்ச்சி நிலை கணிதப் பணிகளை மேற்கொள்வதுடன், இயற்பியலில் புதிய முடிவுகளை பெறும் அமைப்புகளாக மாறியுள்ளனர்.
நாட்டின் பல பகுதிகளில் வாழும் மக்களுக்காக ஏஐ துறையை பயன்படுத்தும் முயற்சிகளில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றம் வியப்பூட்டும். உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் இறையாண்மை கொண்ட ஏஐ கட்டமைப்பில் இந்தியாவின் தலைமைத்துவம் குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் ஒவ்வொரு வாரமும் 10 கோடிக்கும் அதிகமானோர் ChatGPTயை பயன்படுத்துகின்றனர். அவர்களில் மூன்றில் ஒரு பங்கு மாணவர்கள்.
இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. ஏஐ துறையில் வழிநடத்துவதில் சிறந்த இடத்தை பெற்றுள்ளது. தொழில்நுட்பத்தை உருவாக்குவதோடு மட்டும் அல்லாமல், அதை கட்டமைப்பதிலும், எதிர்காலம் குறித்த முடிவுகளிலும் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. வேகமாக முன்னேறுவது அவசியம். இவ்வாறு சாம் ஆல்ட்மென் பேசினார்.
இதனைத் தொடர்ந்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: வேலை சந்தையில் ஏஐ தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், புதிய வாய்ப்புகளை நாம் ஆராய வேண்டும். சிறந்த மாற்றங்களை உருவாக்க முடியும். இந்தியாவில் ஏஐ துறையில் நடைபெறும் பணிகளையும், அதனை ஏற்றுக்கொண்டு உலகிற்கு தலைமை ஏற்று செயல்படுவதையும் பார்க்கும் போது மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்து என்ன நடைபெறும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
