லண்டன்: பிரிட்டன் மன்னர் சார்லசின் சகோதரரான ஆண்ட்ரு மவுன்ட் பேட்டன் விண்ட்ஸ்டர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
விண்ட்ஸரில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. பதவி துஷ்பிரயோகம் குற்றச்சாட்டின் கீழ் இந்த கைது நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ஜெப்ரி எப்ஸ்டீன் விவகாரத்தில் ஆண்ட்ருவின் பெயர் முன்பு தொடர்புபடுத்தப்பட்டிருந்தது. எனினும், அந்த விவகாரத்தில் தமக்கு எந்தவித தொடர்பும் இல்லை என அவர் மறுத்திருந்தார். அந்த சர்ச்சைக்குப் பிறகு, ஆண்ட்ரு அரச குடும்ப பொறுப்புகளில் இருந்து விலகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மறைந்த ராணி எலிசபெத்தின் மூன்றாவது மகனான ஆண்ட்ரு, முன்னதாக தனது இளவரசர் பட்டத்தை துறந்திருந்தார். முன்னாள் இளவரசர் ஒருவர் கைது செய்யப்படுவது பிரிட்டன் வரலாற்றில் அபூர்வ சம்பவமாக பார்க்கப்படுகிறது.
இந்த கைது குறித்து தேம்ஸ் வேலி போலீசார் அறிக்கை வெளியிட்டுள்ளனர். சட்ட விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்ட நபரின் பெயர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
