மும்பை: இண்டி கூட்டணிக்கு தலைமை யார் என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ள நிலையில், கூட்டணியின் வழிநடத்தல் குறித்து காங்கிரஸ் விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா வலியுறுத்தியுள்ளது.
2024 லோக்சபா தேர்தலை முன்னிட்டு பா.ஜ. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்கொள்ள காங்கிரஸ் தலைமையில் இண்டி கூட்டணி உருவாக்கப்பட்டது. இதில் திரிணமுல் காங்கிரஸ், தி.மு.க., சமாஜ்வாதி, ஆம் ஆத்மி மற்றும் இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் இணைந்தன.
ஆனால், லோக்சபா தேர்தலுக்கு பின் பல மாநிலங்களில் கூட்டணி கட்சிகள் தனித்தனி அரசியல் பாதையைத் தேர்வு செய்ததால் விரிசல் ஏற்பட்டது. மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் – காங்கிரஸ் மோதல், கேரளாவில் காங்கிரஸ் – இடதுசாரி கட்சிகள் போட்டி போன்ற சூழல்கள் கூட்டணியின் ஒற்றுமை குறித்து கேள்விகளை எழுப்பியதாக ‘சாம்னா’ தலையங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், தேர்தல் காலங்களில் மட்டுமே கூட்டணி அமைப்பு குறித்து காங்கிரஸ் செயல்படுவது போதுமானதல்ல என்றும், முன்கூட்டியே தலைமை அமைப்பைத் தீர்மானிக்க வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய அரசியல் சூழலில், இண்டி கூட்டணியை தமிழக முதல்வர் ஸ்டாலின் அல்லது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வழிநடத்தலாம் என அந்த தலையங்கம் பரிந்துரை செய்துள்ளது. கூட்டணியின் எதிர்கால செயல்திட்டம் மற்றும் தலைமை குறித்த தெளிவு அவசியம் எனவும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
