திருச்சி: மாநிலத்தின் நிதி நிலை பற்றாக்குறை சூழலில் இலவச திட்டங்கள் அறிவிப்பது பொருத்தமா என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.
திருச்சியில் வரும் 21ம் தேதி நடைபெறும் நாம் தமிழர் கட்சி மாநாட்டில், 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்த உள்ளதாக அவர் தெரிவித்தார். இதுகுறித்து நிருபர்களிடம் பேசிய சீமான், இந்த மாநாடு தமிழக அரசியலில் மாற்றத்தை உருவாக்கும் என்றும், மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் என்றும் கூறினார்.
சுற்றுச்சூழல் பாதிப்பு முக்கிய பிரச்னையாக மாறியுள்ளதாக குறிப்பிட்ட அவர், தேர்தல் பிரசாரத்தை கட்சி ஏற்கனவே தொடங்கிவிட்டதாக தெரிவித்தார். வேட்பாளர்கள் முழுமையாக அறிவிக்கப்பட்ட பின் பிரசாரம் தீவிரப்படுத்தப்படும் என்றார்.
ஆட்சிமுறை குறித்து கருத்து தெரிவித்த சீமான், தற்போதைய நிர்வாக அமைப்பில் மாற்றம் தேவைப்படுவதாக கூறினார். மாநிலத்தில் செயல்படுத்தப்படும் பல திட்டங்கள் கடன் பெற்று நிறைவேற்றப்படுகின்றன என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
அரசு மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளின் தரம் குறித்து சந்தேகம் எழுப்பிய அவர், இலவச திட்டங்களுக்குப் பதிலாக அறிவு மற்றும் மருத்துவ சேவைகள் உலகத் தரத்தில் வழங்கப்பட வேண்டும் என்றார்.
மேலும், அரசு கல்வி நிறுவனங்களின் தரத்தை உயர்த்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்திய சீமான், “நிதி பற்றாக்குறை நிலைமையில் தொடர்ந்து இலவச திட்டங்கள் வழங்குவது சரியானதா?” என கேள்வி எழுப்பினார்.
