கோவை: கோவை ஈஷா யோக மையத்தில் மஹா சிவராத்திரி விழா விமரிசையாக நடைபெற்றது. சத்குரு முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
விழாவில் சத்குரு உரையாற்றுகையில், வாழ்க்கையில் நல்ல காரியங்களை மேற்கொள்ளும் போது தடைகள் வருவது இயல்பு என்றார். அதேவேளையில், ஒருவரின் சொந்த மனம், எண்ணம், உணர்ச்சி ஆகியவை தமக்கே தடையாக மாறாமல் இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார். இதை எளிதாக்கும் கருவியாக யோகத்தை அவர் விளக்கினார்.
மனித உடலை அதிநவீன வேதியியல் தொழிற்சாலையுடன் ஒப்பிட்டு, உடல் மற்றும் மன நிர்வாகத்தின் முக்கியத்துவத்தை சத்குரு எடுத்துரைத்தார். பேரின்பமும், மன அழுத்தமும் ஒருவரின் உள் நிர்வாகத்தை சார்ந்தவை என்றார். ஆதியோகி வழங்கிய 112 முறைகள் மனித நல்வாழ்விற்கான தொழில்நுட்பங்கள் என்றும் குறிப்பிட்டார். கர்மா என்பது செயலும் உருவாக்கமும் என விளக்கி, வாழ்க்கையின் வடிவமைப்பு ஒவ்வொருவரின் கையிலேயே உள்ளது என்றார்.
இவ்விழாவில், நாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்த சாதனையாளர்களை அங்கீகரிக்கும் வகையில் “பவ்ய பாரத் பூஷண்” விருதுகள் வழங்கப்பட்டன. வயலின் கலைஞர் டாக்டர் என்.ராஜம், பரதநாட்டிய கலைஞர் அலர்மேல்வள்ளி, விண்வெளி விஞ்ஞானிகள் நம்பி நாராயணன், கிரண்குமார், வரலாற்றாசிரியர் விக்ரம் சம்பத் உள்ளிட்டோர் விருது பெற்றனர். மேலும், பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் ராணுவத்தினருக்கும் அங்கீகாரம் அளிக்கப்பட்டது. ஆதியோகி திருவுருவம் பதித்த பதக்கங்களை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்கினார்.
பின்னர் உரையாற்றிய ராஜ்நாத் சிங், காசிக்கும் தமிழகத்திற்கும் இடையிலான பண்பாட்டு தொடர்பை நினைவுபடுத்தினார். மஹா சிவராத்திரி விழா சர்வதேச ஆன்மிக கொண்டாட்டமாக மட்டுமல்லாமல், பாரதத்தின் பண்பாட்டு மறுமலர்ச்சியின் வெளிப்பாடாகவும் விளங்குகிறது என்றார். ஈஷா ஹோம் ஸ்கூல் மாணவர்களை சந்தித்த அனுபவத்தையும் பகிர்ந்து, ஆன்மிகம் மற்றும் விஞ்ஞானத்தில் இளம் தலைமுறையை வடிவமைக்கும் முயற்சியை பாராட்டினார்.
இரவு முழுவதும் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் தியானங்கள், மந்திர உச்சாடனைகள், யோகேஷ்வர லிங்க மஹா அபிஷேகம் மற்றும் இசை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலைஞர்கள் இசை நிகழ்ச்சிகளை வழங்கினர்.
இவ்விழாவில் பல்வேறு அரசியல் மற்றும் சமூக பிரமுகர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு மஹா அன்னதானமும் வழங்கப்பட்டது.
