புதுடில்லி: ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்து குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீநகரில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையம் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: “இது மிகவும் உணர்திறன் வாய்ந்த பிரச்சினை. இருந்தாலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, லோக் சபையில் ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்து மீட்டெடுக்கப்படும் என்று கூறியுள்ளார். மாநில அந்தஸ்து குறித்து மிக விரைவில் முடிவு செய்யப்படும் என்று நான் நினைக்கிறேன்,” என்றார்.
இதற்கு பதிலளித்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் அப்துல்லா, “மத்திய அமைச்சர் விரைவில் நல்ல செய்தி கிடைக்கும் என கூறியதாக கேள்விப்பட்டேன். ஒன்றரை வருடமாக காத்திருக்கிறோம். அதிக நேரம் எடுக்காமல் மாநில அந்தஸ்து கிடைக்கும் என நம்புகிறோம். அது கிடைக்கும் வரை மக்களிடம் முழு திருப்தி இருக்காது. ஆனால், நம்பிக்கையை கைவிடவில்லை. மாநில அந்தஸ்து பெற தொடர்ந்து முயற்சி செய்வோம்,” என்றார்.
ஆகஸ்ட் 5, 2019 அன்று, மத்திய அரசு ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது பிரிவை ரத்து செய்தது. அதனைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர் பகுதி, லடாக் உடன் சேர்த்து இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீரின் யூனியன் பிரதேச அந்தஸ்து தற்காலிகமானது என்றும், மாநில அந்தஸ்து மீட்டெடுக்கப்படும் என்றும் மத்திய அரசு முன்பே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
