புதுடில்லி: அதிமுக கட்சி மற்றும் ‘இரட்டை இலை’ சின்னம் தொடர்பான விவகாரத்தில், ஆட்சேபனையாக அளிக்கப்பட்ட மனுக்களுக்கு எவ்வளவு காலத்திற்குள் முடிவெடுக்க முடியும் என, தேர்தல் கமிஷனிடம் டில்லி உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அதிமுகவின் ‘இரட்டை இலை’ சின்னம் தொடர்பான பிரச்னையில் தேர்தல் கமிஷன் விரைந்து விசாரணை நடத்த வேண்டும் என முன்பே நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை தேர்தல் கமிஷன் நிறைவேற்றவில்லை எனக் கூறி, அதிமுக ஒருங்கிணைப்புக் குழு தலைவர் புகழேந்தி டில்லி உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இதனைத் தொடர்ந்து, தேர்தல் கமிஷனுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. பதிலளித்த தேர்தல் கமிஷன், அதிமுக சின்ன ஒதுக்கீடு, கட்சி பெயர் மற்றும் கட்சிக் கொடி பயன்பாடு தொடர்பான மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், புகார் மனுக்கள் விசாரணையில் உள்ளதாகவும் தெரிவித்தது.
இவ்வழக்கு நீதிபதி சச்சின் தாத்தா முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆட்சேபனையாக அளிக்கப்பட்ட மனுக்களுக்கு முடிவு எடுக்க வேண்டிய காலக்கெடு குறித்து தேர்தல் கமிஷனிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், இதுகுறித்து விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, வழக்கை பிப்ரவரி 23ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
