புதுடில்லி: பிப்ரவரி 25 மற்றும் 26 தேதிகளில் பிரதமர் மோடி இஸ்ரேலுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அழைப்பின் பேரில் இந்த விஜயம் நடைபெறுகிறது. பயணத்தின் போது பாதுகாப்பு ஒத்துழைப்பு, வேளாண்மை முன்னேற்றம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து இரு தலைவர்களும் விரிவாக ஆலோசனை நடத்த உள்ளனர்.
மேலும், இந்தியா – இஸ்ரேல் இடையே நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதும் இந்த பயணத்தின் முக்கிய நோக்கமாகக் கூறப்படுகிறது.
பிரதமர் மோடியின் வருகை குறித்த தகவலை, அமெரிக்க யூத அமைப்புகளின் தலைவர்கள் மாநாட்டில் உரையாற்றிய போது இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு முதன்முதலில் வெளிப்படுத்தினார். அப்போது, இந்தியா – இஸ்ரேல் உறவு மேலும் வலுப்பெறும் என அவர் குறிப்பிட்டார்.
பயணத்திற்கான நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், பிரதமர் மோடி இஸ்ரேலிய பார்லிமெண்டில் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, அவரது மூன்றாவது ஆட்சிக்காலத்தில் இஸ்ரேலுக்கு மேற்கொள்ளும் முதல் விஜயமாகும்.
முன்னதாக, 2017ம் ஆண்டு இஸ்ரேல் சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றிருந்தார். அதன் பின்னர் சுமார் 9 ஆண்டுகள் கழித்து நடைபெறும் இந்த விஜயம், சர்வதேச அரசியல் வட்டாரங்களில் முக்கியத்துவம் பெறுகிறது.
