சென்னை: நடிகை திரிஷா குறித்து பேசியதற்கு தமிழக பா.ஜ. தலைவர் நயினார் நாகேந்திரன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு, நடிகரும் தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவருமான விஜய் மற்றும் நடிகை திரிஷா ஆகியோரை தொடர்புபடுத்தி நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்பு எழுந்தது.
இந்த நிலையில், திரிஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாநில அரசியலில் உயர்ந்த நிலை வகிக்கும் ஒருவரிடமிருந்து இழிவான மற்றும் அருவருக்கத்தக்க கருத்தை எதிர்பார்க்கவில்லை. நான் எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பில் இல்லை. அரசியல் கட்சியில் சேரும் எண்ணமும் இல்லை. முன்பும் தெரிவித்ததுபோல், அரசியல் விவகாரங்களில் எப்போதும் நடுநிலையான நிலைப்பாட்டையே கடைப்பிடித்து வருகிறேன்.
என்னுடைய கலைத் திறமையால் மட்டுமே என்னை மதிப்பிட வேண்டும்; அரசியல் தொடர்புகள் என்ற குற்றச்சாட்டுகளால் அல்ல. தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில் விவாதப் பொருளாக்கக் கூடாது என்பது பொதுவான நெறிமுறை. உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் பேசும்போது பொறுப்புணர்ச்சியுடனும் சமநிலையுடனும் நடந்து கொள்ள வேண்டும். எனது பெயரை எனக்கு தொடர்பில்லாத விவகாரங்களில் இழுக்க வேண்டாம். இவ்வாறு திரிஷா குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, நெல்லையில் நிருபர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன் கூறியதாவது: எனது அரசியல் வாழ்க்கையில் யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சித்தது இல்லை. அன்றைக்கு அது தவறி வந்த வார்த்தை. இது குறித்து வானதி சீனிவாசன், அண்ணாமலை ஆகியோர் என்னிடம் பேசியிருந்தனர். இந்த விவகாரத்தில் யாரேனும் வருத்தப்படுவர்களே ஆனால், அதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
