மும்பை: ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ‘சி’ பிரிவில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி, நேபாளத்தை எளிதில் வீழ்த்தியது.
முதலில் பேட்டிங் செய்த நேபாள அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்தது. தீபேந்திர சிங் ஐரி 47 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் சேர்த்தார். சோம்പால் கமி 26, லோகேஷ் பாம் 13, குல்ஷன் ஜா 11, ஆசிப் ஷெய்க் 11 ரன்கள் எடுத்தனர்.
மேற்கு இந்தியத் தீவுகள் அணியில் ஜேசன் ஹோல்டர் 4 ஓவர்களில் 27 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். அகீல் ஹோசைன், மேத்யூ ஃபோர்டு, ஷமர் ஜோசப், ராஸ்டன் சேஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
134 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி 15.2 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டும் இழந்து 134 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் ஷாய் ஹோப் 44 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் எடுத்தார். ஷிம்ரன் ஹெட்மயர் 32 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் சேர்த்தார்.
முன்னதாக பிரண்டன் கிங் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷாய் ஹோப் – ஷிம்ரன் ஹெட்மயர் ஜோடி 2வது விக்கெட்டிற்கு 91 ரன்கள் கூட்டணி அமைத்தது.
மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு இது ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது. 6 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதலிடம் பிடித்து ‘சூப்பர் 8’ சுற்றுக்கு முன்னேறியது. ஆட்டநாயகனாக ஜேசன் ஹோல்டர் தேர்வு செய்யப்பட்டார்.
முன்னதாக ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளை மேற்கு இந்தியத் தீவுகள் வென்றிருந்தது. கடைசி லீக் ஆட்டத்தில் வரும் 19ம் தேதி இத்தாலியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் கொல்கத்தாவில் நடைபெறுகிறது.
நேபாள அணிக்கு இது ஹாட்ரிக் தோல்வியாக அமைந்தது. இதன் மூலம் ‘சூப்பர் 8’ சுற்றுக்கான வாய்ப்பு பறிபோனது.
இன்றைய ஆட்டங்கள்:
ஆப்கானிஸ்தான் – ஐக்கிய அரபு அமீரகம் | இடம்: டெல்லி | நேரம்: காலை 11 மணி
இங்கிலாந்து – இத்தாலி | இடம்: கொல்கத்தா | நேரம்: பிற்பகல் 3 மணி
ஆஸ்திரேலியா – இலங்கை | இடம்: கண்டி | நேரம்: இரவு 7 மணி
