புதுடில்லி: நாட்டின் வளர்ந்து வரும் உற்பத்தி திறன், விரிவடைந்த சேவைத் துறை மற்றும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் முன்னேற்றம் காரணமாக, இந்தியா வலுவான நிலையில் இருந்து பிற நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களை பேசி முடித்து வருகிறது என பிரதமர் தெரிவித்தார்.
செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட், அரசின் ஆட்சி பாணியை பிரதிபலிக்கிறது. உற்பத்தி திறனை மேம்படுத்தும் செலவினங்களே எங்கள் அடையாளம். வரும் நிதியாண்டில் மூலதன செலவினங்களுக்கு 12.2 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2013ம் ஆண்டை விட பல மடங்கு அதிகம்.
குறுகிய கால பிரபலத்துக்காக திட்டங்களை அறிவிப்பதற்குப் பதிலாக, உள்கட்டமைப்பு, வேலைவாய்ப்பு மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான முதலீடுகளை ஊக்குவிப்பதே அரசின் நோக்கம். கடந்த 2014ம் ஆண்டிலிருந்து பட்ஜெட் என்பது வெறும் எண்கள் அல்ல; தெளிவான நோக்கம், அதை அடைவதற்கான வழிமுறை மற்றும் காலக்கெடு கொண்ட திட்டங்களாக அமைந்துள்ளது.
முந்தைய ஆட்சிகள் விட்டுச் சென்ற குறைகளை களைந்து, தைரியமான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏழைகளுக்கு வாய்ப்புகள், இளைஞர்களுக்கு அதிகாரம், பெண்களுக்கு வலிமை மற்றும் விவசாயிகளுக்கு கவுரவம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த பட்ஜெட், வளர்ந்த நாடு என்ற கனவை பிரதிபலிக்கும் அடித்தளமாக அமைகிறது என்றும் தெரிவித்தார்.
மேலும், உற்பத்தித் திறன், சேவைத் துறை மற்றும் குறு, சிறு, நடுத்தர தொழில்களின் வளர்ச்சி, இந்தியாவுக்கு 38 நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை முடிக்க உதவியுள்ளது. இவ்வொப்பந்தங்கள், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான சந்தை வாய்ப்புகளை விரிவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக துணி, தோல், ரசாயனம், கைவினைப்பொருட்கள் மற்றும் நகைத் துறைகளில் ஏற்றுமதியாளர்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும். அரசியல் நிலைத்தன்மை, இந்தியா மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.
சமீப ஆண்டுகளில், இந்தியாவின் உற்பத்திப் பொருட்கள் ஏற்றுமதி தொடர்ந்து புதிய சாதனைகளை படைத்து வருவதாகவும், இது நாட்டின் போட்டித்திறன் மற்றும் உலக சந்தைகளுடனான ஒருங்கிணைப்பை வெளிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
