திருப்பூர்: அறநிலையத்துறை ஊழியர்களே கோவில் உண்டியல் பணத்தை திருடுவதாக ஹிந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: தமிழகத்தில் கோவில்களின் உண்டியல் காணிக்கை எண்ணும் போது பணம், தங்கம், வெள்ளி ஆகியவற்றை ஊழியர்கள் திருடிச் செல்வது தொடர்கதையாகி வருகிறது. சேலம் வெண்ணங்குடி முனியப்பன் கோவிலில் தங்க நகைகள் திருடுபோய் உள்ளன.
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் கோவிலில் கோவில் செயல் அலுவலர் தங்கக் காசுகள் மற்றும் பணத்தை திருடியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிந்த பிறகும் குற்றவாளி சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருத்தணி முருகன் கோவிலில் பணியாளர்கள் இருவர் 1.25 லட்சம் ரூபாய் உண்டியல் பணத்தை திருடியதாக கூறப்படுகிறது. சமயபுரம் மாரியம்மன் கோவிலில் செயல் அலுவலர் தங்கக் காசுகளை திருடி தலைமறைவாகியுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அறநிலையத்துறை என்பது ஹிந்து கோவில்களின் சொத்துக்கள் மற்றும் வருமானங்களை பாதுகாக்க உருவாக்கப்பட்ட அமைப்பு. ஆனால் அறநிலையத்துறை ஊழியர்களே உண்டியல் பணத்தை திருடுவதால் அறநிலையத்துறை அவசியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
உண்டியல் திருட்டில் ஈடுபட்ட பலர் தண்டனைக்கு உட்படுத்தப்படாமல் காப்பாற்றப்படுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே ஓய்வுபெற்ற நீதிபதிகள் முன்னிலையில் உண்டியல் எண்ணும் பணியை நடத்த வேண்டும். கோவிலை விட்டு அறநிலையத்துறையினர் வெளியேற வேண்டும். பிற மத வழிபாட்டு தலங்கள் போல ஹிந்து கோவில்களும் உள்ளூர் மக்களால் பராமரிக்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
