சேலம்: மக்கள் உண்மையாகவே மகிழ்ச்சியில் இருந்தால் ஏன் போராட்டங்கள் நடக்கின்றன. திமுக ஆட்சி அவுட் ஆப் கண்ட்ரோல் நிலையில் உள்ளது. உங்களுக்கு யார் வேண்டும்; விஜயா அல்லது ஸ்டாலினா என தவெக தலைவர் விஜய் சேலத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பேசுகையில் கேள்வி எழுப்பினார்.
நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் பேசியதாவது: தைரியம் அனைத்திற்கும் அடிப்படை. ஏளனமாக பார்க்கப்படும் சூழலில் நாம் யார் என்பதை நிரூபிக்க வேண்டும் என்ற உத்வேகம் ஏற்படுகிறது. கிண்டல், கேலியாக பேசப்படும் விஷயங்களை நேர்மறையாக மாற்றும் இடத்தில்தான் உண்மையான சக்தி உருவாகிறது.
என் வீடு எது என்று கேட்பவர்களுக்கு பதிலாக, தமிழகம் தான் என் வீடு. 8 கோடி மக்கள் என் குடும்பம். தமிழகத்தின் முதல் படைவீரனாகவும், பாதுகாவலனாகவும் மக்களுடன் நிற்பதே என் குறிக்கோள்.
நான் ஓட்டு கேட்க மட்டும் வரவில்லை; நீதி கேட்டு வந்துள்ளேன். மக்களுக்காக அரசியலுக்கு வந்தது தவறா என அவர் குறிப்பிட்டார்.
மற்ற கட்சிகளுக்கு வழங்கப்படும் உரிய இடமும் பாதுகாப்பும் எனக்கு மறுக்கப்படுவதாகவும், இது நியாயமல்ல எனவும் அவர் கூறினார்.
காசு கொடுத்து ஓட்டு வாங்கலாம் என்ற எண்ணம் இனி செயல்படாது. மக்கள் பணத்தை வாங்கிக்கொள்ளுங்கள்; ஆனால் அவர்களின் காதில் விசில் அடித்து அனுப்புங்கள். எங்கள் ஓட்டு எங்கள் உரிமை. எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது.
ஊழல் ஆட்சியை மக்கள் நிராகரிப்பார்கள். மக்களை நேசிக்கும் குணம் இருந்தால் நல்லாட்சி வழங்க முடியும். நல்லாட்சி வழங்க உயர்ந்த கல்வி அவசியமில்லை.
முதல்வர் மு.க. ஸ்டாலின் குறித்து அவர் கூறியதாவது: சட்டம் ஒழுங்கில் திமுக ஆட்சி அவுட் ஆப் கண்ட்ரோல் நிலையில் உள்ளது. மக்கள் மகிழ்ச்சியில் இருந்தால் போராட்டங்கள் ஏன் நடைபெறுகின்றன?
விஜயை நம்புகிறீர்களா அல்லது ஸ்டாலினை நம்புகிறீர்களா என மக்களிடம் கேள்வி எழுப்பிய அவர், சமூக நீதிக்காக நல்லாட்சி அமைப்போம். வெற்றி நிச்சயம் என தெரிவித்தார்.
சேலத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி இணையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
