புதுடில்லி: எந்த மாநிலத்துக்கும் அல்லது எந்த திட்டத்துக்கும் நிதி நிறுத்தப்படவோ, குறைக்கப்படவோ இல்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மத்திய பட்ஜெட் மீதான விவாதத்துக்கு பதிலளித்து ராஜ்யசபாவில் அவர் கூறியதாவது: ஜிஎஸ்டி, சாலை வரி மற்றும் பிற வருமானங்களில் இருந்து மாநில அரசுகள் நிதி எதிர்பார்க்கின்றன. அதே நேரத்தில் குறைபாடுகளுக்கு மத்திய அரசை தொடர்ந்து விமர்சிக்கின்றன.
நிதியை குறைத்து விட்டோம் என கூறுவது தவறு. கடந்த காலங்களில் கஜானாவில் இருந்து எவ்வளவு தொகை வெளியேறியது என்பதை அடிப்படையாக வைத்து வெற்றி கணக்கிடப்பட்டது. அது உண்மையில் செலவிடப்பட்டதா என்பது உறுதி செய்யப்படவில்லை. இது வங்கி அமைப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தற்போது அரசின் செலவினங்களில் முழுமையான வெளிப்படைத்தன்மை உள்ளது. செலவினங்களை பதிவு செய்வதற்காக அதிக நிதி வெளியிடப்படுவது இல்லை. தேவைப்படும்போது மட்டுமே நிதி வழங்கப்படுகிறது.
எந்த மாநிலத்துக்கும் அல்லது எந்த திட்டத்துக்கும் நிதி மறுக்கப்படவோ, நிறுத்தப்படவோ இல்லை. இதை நிதி குறைப்பு என அழைக்க முடியாது. வரி செலுத்துவோரின் ஒவ்வொரு ரூபாயும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது என்பதற்கான உத்தரவாதம் ஆகும். மத்திய அரசின் நிதி என்பது எப்போதும் பயன்படுத்தக்கூடிய இலவச தொகுப்பு அல்ல. இது ஒவ்வொரு இந்தியரின் கடின உழைப்பின் பங்களிப்பு ஆகும்.
தனிநபர்கள் அதிகம் பேர் வருமான வரி செலுத்துவது என்பது நடுத்தர மக்கள்மீது அடக்குமுறை அல்ல என அவர் தெரிவித்தார்.
