புதுடில்லி: லோக்சபாவில் பட்ஜெட் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசிய வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்து பிரதமர் நரேந்திர மோடி பாராட்டி உள்ளார்.
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. 2026-27ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1ம் தேதி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். தற்போது பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்றைய விவாதத்தில், இந்த ஆண்டு பட்ஜெட் நாட்டின் பொருளாதார மாற்றத்திற்கு எவ்வாறு பங்களிக்கும் என்பது குறித்து நிர்மலா சீதாராமன் விரிவான விளக்கத்தை லோக்சபாவில் வழங்கினார்.
பாராட்டு:
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மத்திய பட்ஜெட்டை படிக்காமல் வந்து பேசியதாக நிர்மலா சீதாராமன் சாடி பேசியிருந்தார். ஏழைகள் மற்றும் விவசாயிகள் நலனை விற்றது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தான் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், நிர்மலா சீதாராமன் பேசிய வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்த பிரதமர் மோடி பாராட்டுக்களை தெரிவித்தார்.
முக்கியத்துவம்:
இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், இந்த ஆண்டு பட்ஜெட் நாட்டின் பொருளாதார மாற்றத்திற்கு எவ்வாறு பங்களிக்கும் என்பது குறித்து நிர்மலா சீதாராமன் விரிவான விளக்கத்தை அளித்துள்ளதாக குறிப்பிட்டார். மேலும், சீர்திருத்த நடவடிக்கைகள், சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவு, திறன் மேம்பாடு, அடுத்த தலைமுறை உள்கட்டமைப்பு, கல்வி உள்ளிட்ட துறைகளுக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம் குறித்து அவர் விளக்கியதாக தெரிவித்தார்.
