உள்நாட்டு செயலி விளம்பரம் நோக்கில் வாட்ஸ் அப் தடை: ரஷ்யா நடவடிக்கை
அரசுக்கு சொந்தமான உள்நாட்டு செயலியை ஊக்குவிக்கும் நோக்கில் ரஷ்யா, வாட்ஸ் அப் செயலிக்கு தடை விதித்துள்ளது. இதற்கு வாட்ஸ் அப் நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது. டெலிகிராம் சேவையிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மாஸ்கோ: அரசுக்கு சொந்தமான உள்நாட்டு சமூக வலைதளங்களை ஊக்குவிக்கும் மற்றும் விளம்பரப்படுத்தும் நோக்கில், சமூக ஊடகமான WhatsApp செயலியை Russia தடை செய்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த Meta நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ் அப் செயலியை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ரஷ்ய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ‘MAX’ என்ற செயலியை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல அந்நாடு முயற்சி செய்து வருகிறது. தற்போது ரஷ்யாவில் 10 கோடிக்கும் அதிகமானோர் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதை ஒழிக்கும் வகையில், நாடு முழுவதும் வாட்ஸ் அப் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கண்டனம் இந்த தடையை கண்டித்து வாட்ஸ் அப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரஷ்ய அரசு தன்னுடைய செயலியில் பயனர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், வாட்ஸ் அப் செயலியின் செயல்பாட்டை தடுக்க முயற்சி செய்துள்ளது. 10 கோடி பேருக்கும் மேற்பட்ட பயனர்களின் தகவல் தொடர்புக்கு பாதிப்பு ஏற்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளது.
ரஷ்ய பயனர்களுக்கு தொடர்ந்து சேவையை வழங்க எங்களால் முடிந்த அனைத்தையும் தொடர்ந்து செய்து வருகிறோம் என வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேபோல், மற்றொரு முன்னணி செயலியான Telegram சேவையிலும் அந்நாட்டு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான Roskomnadzor கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
டெலிகிராமுக்கும்… டெலிகிராம் செயலிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை அந்நிறுவனத்தின் நிறுவனர் Pavel Durov விமர்சித்துள்ளார். அரசு கட்டுப்பாட்டில் உள்ள செயலிக்கு மாற மக்களை கட்டாயப்படுத்தும் முயற்சி நடைபெறுகிறது என அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஏற்கனவே, ரஷ்ய சட்டங்களைப் பின்பற்றாவிட்டால் பல இணைய தளங்கள் தடை செய்யப்படும் என்று ரஷ்யா எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கதது.