புதுடில்லி: ஐந்து மாநில சட்டசபை தேர்தலையொட்டி, சொந்த மாவட்டங்களில் பணியாற்றும் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யுமாறு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகம், மேற்கு வங்கம், கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தலைமை தேர்தல் கமிஷன் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சொந்த மாவட்டம் அல்லது ஊர்களில் நீண்டகாலமாக பணியாற்றும் அதிகாரிகளை உடனடியாக பணியிட மாற்றம் செய்யுமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு சம்பந்தமில்லாத அரசு டாக்டர்கள், இன்ஜினியர்கள், ஆசிரியர்கள் அல்லது தலைமை ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை எனவும் தேர்தல் கமிஷன் தெளிவுபடுத்தியுள்ளது.
இதுகுறித்து ஐந்து மாநில தலைமை செயலர்களுக்கு தேர்தல் கமிஷன் கடிதம் அனுப்பியுள்ளது. அதில், தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் சொந்த மாவட்டத்தில் நீண்டகாலமாக பணியாற்றி வந்தால், அவர்களை மாற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதே சமயம், தேர்தல் பணியில் தொய்வு ஏற்படுவதை தவிர்க்க மண்டல அளவிலான அதிகாரிகளை மாற்றம் செய்ய தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலின்போது சொந்த ஊரில் பணியாற்றும் அதிகாரிகளை மாற்றம் செய்வது தொடர்பாக தேர்தல் கமிஷன் வழிகாட்டுதல்கள் வழங்குவது வழக்கம். அதன்படி இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
