சென்னை: “பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்த ஆண்டு அமலுக்கு வரும் இரண்டாம் தேர்வு மதிப்பெண் மேம்பாட்டுக்கானது; முதல் தேர்வை கட்டாயம் எழுத வேண்டும்” என சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளது.
சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் 17 முதல் துவங்க உள்ளன. இதில் 26 லட்சம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.
தேசிய கல்வி கொள்கையின்படி இந்த ஆண்டு இரண்டு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இதுகுறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் குழப்பம் நிலவுகிறது. முதல் தேர்வை எழுதாமல் இரண்டாம் தேர்வை மட்டும் எழுதலாமா என கேள்விகள் எழுந்தன.
இதுகுறித்து சி.பி.எஸ்.இ. அளித்துள்ள விளக்கத்தில் கூறியதாவது: வரும் மே 15 முதல் ஜூன் 1 வரை நடைபெறும் இரண்டாம் பொதுத்தேர்வில் அதிகபட்சமாக மூன்று பாடங்களை மட்டுமே எழுத முடியும். இந்த தேர்வு மதிப்பெண் மேம்பாட்டுக்காக வழங்கப்படும் வாய்ப்பு.
எனவே முதல் பொதுத்தேர்வில் அனைவரும் பங்கேற்பது கட்டாயம். இரண்டாம் தேர்வில் விருப்பமுள்ளோர் மட்டுமே பங்கேற்கலாம். முதல் தேர்வை எழுதாமல் இரண்டாம் தேர்வை எழுத முடியாது.
இரண்டு தேர்வுகளையும் எழுதியால் ஒரு பாடத்தில் எந்த தேர்வில் அதிக மதிப்பெண் கிடைக்கிறதோ அது கணக்கில் எடுக்கப்படும்.
இவ்வாறு சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளது.
