சென்னை: சட்டசபை தேர்தலுக்கான பணிகளை வேகப்படுத்துமாறு, மாவட்டச் செயலர்களுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஆனால், “செய்ய வேண்டியதை செய்யாமல் எங்களை விரட்டி என்ன பிரயோஜனம்?” என பழனிசாமிக்கு எதிராக கட்சியின் மாவட்டச் செயலர்கள் புலம்பி வருகின்றனர்.
அ.தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பழனிசாமி பேசியதாவது:
“‘விடியா ஆட்சி; உங்கள் வீட்டு பில்லே சாட்சி’ என்ற பிரசாரத்தை பல மாவட்டச் செயலர்கள் கவனிக்கவில்லை. அதை தீவிரமாக செயல்படுத்துங்கள். நீங்கள் எதிர்பார்த்த கூட்டணியை அமைத்து கொடுத்து விட்டேன். இனியும் எதற்காக தாமதிக்கிறீர்கள்? நமக்குள் இருக்கும் மனஸ்தாபங்களை விலக்கி வைத்து, இணைந்து பணியாற்றுங்கள்.
தேர்தல் பணிகளில் கூட்டணி கட்சியினரையும் இணைத்துக் கொள்ளுங்கள். இன்னும் சில மாவட்டங்களில் பூத் கமிட்டியே அமைக்கப்படவில்லை. தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ளன. இனியும் அலட்சியமாக இருக்க வேண்டாம்.
ஆட்சி அதிகாரம் கையில் இருந்தாலும், தி.மு.க., மீது மக்கள் அதிருப்தியாக உள்ளனர். அதனை நமக்கு சாதகமாக மாற்றுங்கள். தி.மு.க.,வுக்கு எதிராக தைரியமாக களத்தில் நில்லுங்கள். உங்களுக்கு தேவையான உதவிகளை செய்ய, தலைமையிடம் தயாராக உள்ளது.”
இவ்வாறு பழனிசாமி பேசினார்.
மாவட்டச் செயலர்கள் புலம்பல்
கூட்டத்தில் பங்கேற்ற பின்னர், சில மாவட்டச் செயலர்கள் கூறியதாவது:
தி.மு.க., ஆட்சியில் உயர்த்தப்பட்ட மின்சார கட்டணம், சொத்து வரி குறித்து வீடு வீடாகச் சென்று ஆதாரத்துடன் விளக்குவதுதான் “விடியா ஆட்சி; உங்கள் வீட்டு பில்லே சாட்சி” என்ற பிரசாரத்தின் நோக்கம். ஆனால், ஒரு வீட்டுக்கே ‘பில்’ எடுத்துக் கொடுக்க 20 நிமிடம் ஆகிறது. தேர்தல் நேரத்தில் இவ்வாறு பிரசாரம் செய்வது சாத்தியமில்லை.
தேர்தல் பணிகளில் தலைமையிடமிருந்து எந்த ஒத்துழைப்பும் இல்லை. உதாரணமாக, “தி.மு.க., அரசால் சென்னை ஆர்.கே. நகரில் புதிதாக கட்டப்பட்ட பூங்காவில் எதுவுமே தரமில்லை” என, வடசென்னை மாவட்டச் செயலர் ராஜேஷ் ஆதாரத்துடன் வீடியோ வெளியிட்டார். அதற்காக அவர் மீது அரசு சொத்தை சேதப்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனை கண்டித்து பழனிசாமி ஒரு கண்டன அறிக்கையாவது வெளியிடவில்லை. அரசுக்கு எதிராக போராட்ட அறிவிப்பு வரும் என எதிர்பார்த்தோம்; அதுவும் இல்லை. மாவட்டச் செயலருக்கே இந்த நிலைமை என்றால், இனி வழக்குக்கு பயந்து யாரும் தி.மு.க.,வை எதிர்க்க மாட்டார்கள். இவ்வளவு பிரச்னைகள் இருக்கும் போது, “இணைந்து பணியாற்றுங்கள்; மக்களைத் தேடி செல்லுங்கள்” என்று மட்டும் சொன்னால் போதுமா?
இவ்வாறு அவர்கள் கூறினர்.
14 ‘சீட்’ கேட்கும் தே.மு.தி.க.,
மாவட்டச் செயலர்கள் கூட்டம் முடிந்த பின், முன்னாள் அமைச்சர் **எஸ்.பி. வேலுமணி**யைச் சூழ்ந்த நிர்வாகிகள் சிலர், “தே.மு.தி.க. கூட்டணிக்கு வெளியே இருந்தால், நம் ஓட்டுகள் சிதறும் வாய்ப்பு உள்ளது. எனவே, அவர்களையும் கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும்” என வலியுறுத்தினர்.
அதற்கு வேலுமணி, “தே.மு.தி.க.,வை கூட்டணிக்குள் கொண்டு வருவதில் சிக்கல் உள்ளது. அவர்கள் 14 தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும் கேட்கிறார்கள். அதனால்தான் கூட்டணியை இன்னும் இறுதி செய்ய முடியவில்லை” என கூறியுள்ளார்.
