சென்னை: தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நடைபெறும் சட்டசபை தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க, பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 28ம் தேதி மதுரை வர உள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ஜ., பா.ம.க., அ.ம.மு.க., த.மா.கா., உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த கூட்டணி சார்பில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் கடந்த ஜனவரி 23ம் தேதி தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று, கூட்டணியின் தேர்தல் பிரசாரத்தை துவக்கி வைத்தார்.
அந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “நாங்கள் தமிழ் கலாசாரம் குறித்து வெறும் வாய்ப்பந்தல் போடுபவர்கள் அல்ல; அதை பாதுகாப்பதில் உறுதிப்பாட்டோடு செயல்பட்டு வருகிறோம். முருகனுக்கு விளக்கு போடுவது விவாதப் பொருளாக மாற்றப்பட்டது. அப்போது பக்தர்களின் உரிமைகளுக்கும், அதிகாரங்களுக்கும் நம் தலைவர்கள் குரல் கொடுத்தனர். ஆனால் தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், ஓட்டு வங்கி அரசியலுக்காக நீதிமன்றத்தையே அவமானப்படுத்தினர்,” என விமர்சித்தார்.
அதன் தொடர்ச்சியாக, வரும் பிப்ரவரி 28ம் தேதி மதுரை வருகை தரும் பிரதமர் மோடி, அங்கு நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இதற்கு முன், அவர் திருப்பரங்குன்றம் கோவில் சென்று சுவாமி தரிசனம் செய்ய உள்ளார்.
