ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்மு–காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில், பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தப் பகுதியில் பாதுகாப்புப் படையினரும், போலீசாரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
படையினரின் ட்ரோன் கண்காணிப்பை கண்டு உஷாரான பயங்கரவாதிகள், தங்கள் பதுங்குமிடத்திலிருந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இதில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்டவர்கள், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. அவர்களில் ஒருவன் ‘அவு மாவியா’ என அடையாளம் காணப்பட்டுள்ளான். கடந்த பல ஆண்டுகளாக ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் கோஷ்டி தலைவனாக அவன் செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
மற்றொரு பயங்கரவாதி ‘ஜப்பார்’ என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் மேலும் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என பாதுகாப்புப் படையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அந்தப் பகுதியில் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
