புதுடில்லி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிரான வழக்கில், இன்று (பிப்ரவரி 04) மம்தா பானர்ஜி நேரில் ஆஜராகி, உச்ச நீதிமன்றத்தில் வாதாடினார். பதவியில் இருக்கும் ஒரு மாநில முதல்வர், சுப்ரீம் கோர்ட்டில் நேரில் ஆஜராகி வாதிட்டது இதுவே முதல் முறை.
நாடு முழுவதும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை, தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. இறந்து போன வாக்காளர்கள், இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் பல இடங்களில் பெயர் இடம்பெற்றுள்ள வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர். மேற்கு வங்க மாநிலத்தில் வங்கதேசத்தவர் ஊடுருவல் அதிகம் இருப்பதால், அங்கு தேர்தல் கமிஷன் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.
வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் நோக்கில் தேர்தல் கமிஷன் எடுத்துள்ள இந்த நடவடிக்கைக்கு, திரிணமுல் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. எஸ்.ஐ.ஆர்., பணியை எதிர்த்து, மேற்கு வங்கத்தில் ஆளும் கட்சி சார்பில் பல போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து, முதல்வர் மம்தா பானர்ஜி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
நேற்று முன்தினம் டில்லி சென்ற மம்தா பானர்ஜி, தலைமை தேர்தல் கமிஷனர் உள்ளிட்ட மூன்று தேர்தல் கமிஷனர்களை சந்தித்து பேசினார். இன்று (பிப்., 04) அவரது வழக்கு, தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பக்சி, விபுல் பான்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் தானே நேரில் ஆஜராகி வாதிட அனுமதி கேட்டு மம்தா பானர்ஜி மனு அளித்திருந்தார். மனுதாரர் அவரே என்பதால் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து மம்தா பானர்ஜி, தேர்தல் கமிஷனுக்கு எதிராக தன் தரப்பு வாதங்களை நேரில் முன்வைத்தார்.
மம்தா பானர்ஜி, கொல்கத்தாவில் உள்ள யோகேஷ் சந்திர சவுத்ரி சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பு பயின்றவர். வழக்கறிஞர் பயிற்சியையும் முடித்த பிறகே அரசியலுக்குள் நுழைந்தார். சுப்ரீம் கோர்ட்டின் நடைமுறைகள் குறித்து நல்ல அறிவு உள்ளதால், அவர் தன் தரப்பு வாதங்களை நேரடியாக முன்வைத்தார்.
மம்தா பானர்ஜியின் வாதங்கள்:
-
தன் கட்சிக்காக அல்ல; பொதுமக்களின் உரிமைக்காக எஸ்.ஐ.ஆர்., பணியை எதிர்க்கிறேன்.
-
வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, ஆதார் அட்டையை ஏற்றுக்கொள்ள தேர்தல் கமிஷன் மறுக்கிறது.
-
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அல்ல; பெயர் நீக்கவே எஸ்.ஐ.ஆர்., நடத்தப்படுகிறது.
-
தேர்தல் கமிஷனுக்கு ஆறு முறை கடிதங்கள் எழுதியும் இதுவரை பதில் இல்லை; மேற்கு வங்கத்தை மட்டும் ஏன் குறிவைத்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது?
இவ்வாறு மம்தா பானர்ஜி வாதிட்டார்.
ஒத்திவைப்பு
இந்த வழக்கில், இரண்டு நாட்களுக்குள் தேர்தல் கமிஷன் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
வரலாற்று தருணம்
சுப்ரீம் கோர்ட் வரலாற்றில், முன்னாள் முதல்வர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள் பலர் வாதாடியுள்ளனர். ஆனால், பதவியில் இருக்கும் ஒரு மாநில முதல்வர், தானே நேரில் ஆஜராகி, தன் வழக்கை வாதிட்டது இதுவே முதல் முறை. அந்த வகையில், மம்தா பானர்ஜி புதிய வரலாறு படைத்துள்ளார்.
