சென்னை: “இப்படி ஒருமுறையாவது பிரஸ் மீட்டுக்கு வர சொல்லுங்கள். நிருபர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லட்டும். அவர் எதுவும் தெரியாமல், அறியாமல் பேசுகிறார்,” என நடிகர் **விஜய்**யை, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கடுமையாக சாடி உள்ளார்.
சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க.,வின் இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை இன்று இபிஎஸ் அறிவித்தார்.
📌 வாக்குறுதிகள் விபரம்:
-
முதியோருக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
-
விதவை பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவருக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.1,200 லிருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்படும்.
-
மாணவர்கள் வங்கிகளில் பெற்ற கல்விக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
-
குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு மூன்று சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும்.
-
ஜல்லிக்கட்டு போட்டியின் போது வீரர்கள் உயிரிழந்தால், குடும்பத்தாருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும்.
-
படுகாயம் அடைந்த வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்காக ரூ.2,000 வழங்கப்படும்.
-
ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அரசின் சார்பில் ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படும்.
-
தற்போதுள்ள ஆன்லைன் பதிவு முறை ரத்து செய்யப்பட்டு, பழைய நடைமுறை பின்பற்றப்படும்.
-
மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
-
மாற்றுத்திறனாளிகள் கூட்டுறவில் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
மேலும் அதிகமான அறிவிப்புகள் வரும் என்றும், ஆட்டோ ஓட்டுநர்கள் வைத்துள்ள கோரிக்கைகள் பரிசீலனையில் உள்ளதாகவும் இபிஎஸ் தெரிவித்தார். அ.தி.மு.க., தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி தான் பலம் வாய்ந்த கூட்டணி எனவும் கூறினார்.
🎯 விஜய் குறித்த விமர்சனம்
அ.தி.மு.க., குறித்து விஜய் விமர்சனம் செய்தது தொடர்பான கேள்விக்கு இபிஎஸ் அளித்த காட்டமான பதில்:
“அவர் பொதுவெளியில் வந்து பார்த்தால் தான் தெரியும். பொதுவெளியில் வரவில்லை. ஒரு சம்பவம் நடந்து போய்விட்டது. 72 நாட்கள் ஒரு கட்சி தலைவர் வெளியில் வரவில்லை. நாட்டில் என்ன நடக்கிறது என்று அவருக்கு தெரியவில்லை.
எந்த கட்சி எந்த கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது, எந்த கட்சி தேர்தலில் தலைமை தாங்கும் என்பதே அவருக்கு தெரியவில்லை. அவருக்கு ஒன்றுமே தெரியாத நிலையில் எங்களிடம் கேள்வி கேட்கிறார்கள். அவரிடம் போய் கேள்வி கேளுங்கள்.
ஏற்கனவே கூட்டணி அமைக்கும் போது, அ.தி.மு.க., தெளிவுபடுத்தி விட்டது. எங்களது கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அ.தி.மு.க., ஆட்சி அமைக்கும். எங்களுடைய கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் இபிஎஸ் என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
அவர் மக்களையும் பார்ப்பதில்லை; தொலைக்காட்சியை பார்த்தும் தெரிந்து கொள்வதில்லை. அவரை பற்றி எங்களிடம் கேள்வி கேட்கலாமா?
ஒரு கட்சியின் தலைவருக்கு எல்லாம் தெரிந்து இருக்க வேண்டும். அவர் தெரியாமல், அறியாமல் பேசிக் கொண்டிருக்கிறார். ஒருமுறையாவது பிரஸ் மீட்டுக்கு வர சொல்லுங்கள். நிருபர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லட்டும். வெளியில் என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ளட்டும்.
ஊழல் சக்தி என்றால் எனக்கு தெரியவில்லை. ஜெயலலிதாவை ரோல் மாடல் என்று சொல்லிவிட்டார். அவர் யாரை கூட வைத்து கொண்டு ஊழல் என்று சொல்கிறார். அண்மையில் அ.தி.மு.க.,வில் இருந்து விலகி த.வெ.க.,வில் இணைந்துள்ளார். அவரது பெயரை சொல்ல விரும்பவில்லை,” என இபிஎஸ் தெரிவித்தார்.
