டோக்கியோ: ஜப்பானில் வரலாறு காணாத அளவுக்கு கடும் பனிப்பொழிவு நிலவி வரும் நிலையில், இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜப்பான் நாட்டின் வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் கடந்த சில வாரங்களாக கடுமையான பனிப்பொழிவு தொடர்கிறது. குறிப்பாக அமோரி, நிகாட்டா மற்றும் அகிதா மாகாணங்கள் மிகுந்த பாதிப்பை சந்தித்துள்ளன.
அமோரி மாகாணத்தின் சில பகுதிகளில் சுமார் 4.5 மீட்டர் (14 அடி) உயரம் வரை பனி குவிந்துள்ளது. இது கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அபூர்வமான சூழல் ஆகும்.
கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் பனிப்பொழிவு மற்றும் அதனுடன் தொடர்புடைய விபத்துகளால் 30 பேர் உயிரிழந்துள்ளனர். குடியிருப்புகள் மற்றும் அலுவலக கட்டடங்கள் முழுவதும் பனியால் மூடப்பட்டுள்ளதால் மக்கள் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சீதோஷ்ண நிலை மோசமாக இருப்பதுடன், பல பகுதிகளில் மின்வெட்டும் நிலவுவதால் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். வாகனங்கள் இயக்க முடியாத சூழ்நிலையில், பலர் வெளியிடங்களுக்கு நடந்தே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. பொது போக்குவரத்தும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
கட்டடங்களின் மேற்கூரைகளில் குவிந்துள்ள பனியை அகற்றும் பணிகளின்போதும், பனியில் புதைந்தும் பலர் உயிரிழந்துள்ளனர். அதிகமான உயிரிழப்புகள் அமோரி மாகாணத்தில் பதிவாகியுள்ளன.
