புதுடில்லி: நடப்பு நிதியாண்டில் கடந்த டிசம்பர் மாதம் வரை, யுபிஐ மூலம் ரூ.230 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக, பார்லிமென்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ராஜ்யசபாவில் கேள்வி நேரத்தின் போது, மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி அளித்த பதில்:
உள்நாட்டு பணப்பரிமாற்றம் மிகவும் முக்கியமானதாக உள்ளது. 2025–26 நிதியாண்டில் டிசம்பர் மாதம் வரை, யுபிஐ மூலம் ரூ.230 லட்சம் கோடி அளவுக்கு பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. 2022–23 நிதியாண்டில் ரூ.139 லட்சம் கோடி அளவுக்கு பணப்பரிமாற்றம் நடந்தது. தற்போது யுபிஐ, இந்தியாவை தாண்டி எட்டு வெளிநாடுகளில், அந்தந்த நாடுகளின் உள்ளூர் சட்டங்களின்படி பயன்படுத்தப்படுகிறது என அவர் தெரிவித்தார்.
மேலும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளதாவது:
பூடான், பிரான்ஸ், மொரிஷியஸ், நேபாளம், கத்தார், சிங்கப்பூர், இலங்கை மற்றும் ஐக்கிய அரபு எமீரேட்ஸ் ஆகிய நாடுகளில் யுபிஐ சேவை பயன்படுத்தப்படுகிறது.
யுபிஐ முறையை சர்வதேச அளவில் விரிவுபடுத்த, மத்திய அரசு, ரிசர்வ் வங்கி மற்றும் என்பிசிஐ சர்வதேச பணப்பரிமாற்ற கழகம் (NIPL) இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. கடந்த 2024ஆம் ஆண்டு வெளியான உலகளாவிய அறிக்கையின்படி, உலகளவில் நடைபெறும் ஆன்லைன் பணப்பரிமாற்றங்களில், யுபிஐ மூலம் மட்டும் 49 சதவீதம் நடைபெறுகிறது என்பதும் தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
