புதுடில்லி: அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக விளக்கம் அளிக்க கோரி, எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால், லோக்சபா மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 1ஆம் தேதி, 2026–27ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். தற்போது, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இன்று (பிப்ரவரி 3) காலை 11 மணிக்கு லோக்சபா கூடியதும், அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்து உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி, எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா பலமுறை எச்சரித்தும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கூச்சல் மற்றும் முழக்கங்களில் ஈடுபட்டனர்.
இதனால் அவையில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. தொடர்ந்து அமளி நீடித்ததை அடுத்து, லோக்சபா மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
அதே நேரத்தில், ராஜ்யசபாவில் அலுவல் நேர நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. அவையை துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் கவனித்து வருகிறார்.
எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
ராஜ்யசபாவில் இந்தியா–அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தை தொடர்ந்து விவாதிக்க அனுமதி வழங்க மறுத்த அவை தலைவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
