புதுடில்லி: இந்தியா–அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் விவசாயிகளுக்கு தீங்கு விளைவிக்கும் என காங்கிரஸ் கட்சி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபோன்ற பொய்களைப் பரப்பக்கூடாது என, பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பார்லிமென்ட் வளாகத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
லோக்சபாவில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது உரையைத் தொடரலாம் என்று காங்கிரஸ் தலைவர்களிடம் நான் தெரிவித்தேன். ஆனால், முன்னாள் ராணுவத் தளபதி கூறாத, உண்மையல்லாத மற்றும் விதிகளின்படி அனுமதிக்கப்படாத விஷயங்களை அவையின் மீது திணிக்கக் கூடாது. அத்தகைய விஷயங்களை அவர் பேச முயற்சிக்கக் கூடாது. ஏனெனில், அது மற்ற கட்சி எம்பிக்கள் பேசுவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது.
ராகுலுக்கு பேச வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இந்த விஷயத்தில் சபாநாயகர் ஏற்கனவே முடிவெடுத்துவிட்டார். மேலும், அவை மரபுகளுக்கு உட்படாததால், இதற்கு நாங்கள் பதில் அளிக்க முடியாது என அவர்களிடம் தெரிவித்துள்ளேன். ராகுல் அவையின் உறுப்பினர் என்பதால், அவரும் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர் அவைக்கு அப்பாற்பட்டவர் அல்ல.
ராஜ்யசபாவில் இந்தியா–அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி வெளிநடப்பு செய்து பொய்களைப் பரப்பி வருகிறது. இது சரியானது அல்ல. அந்த ஒப்பந்தம் நமது விவசாயிகளுக்கு தீங்கு விளைவிக்கும் என காங்கிரஸ் கூறியதாக நான் கேள்விப்பட்டேன். இதுபோன்ற பொய்களை பரப்பக் கூடாது.
தற்போது, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. மற்ற விஷயங்களுக்கும் போதிய நேரம் உள்ளது. அரசு எதையும் தவிர்க்கப் போவதில்லை. விதிகளின்படி செயல்பட்டு, சபைக்கு வந்து, அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிப்போம். இவ்வாறு கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.
