சென்னை: சென்னையில் நேற்று நடைபெற்ற த.வெ.க., கட்சி விழாவில், கட்சித் தலைவர் **விஜய்**யை முருகக்கடவுளாக உருவகப்படுத்தி பாடல் பாடப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது. அந்த பாடலுக்கு விஜயும் சேர்ந்து ஆடியது, பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
த.வெ.க., மூன்றாம் ஆண்டு துவக்க விழா, சென்னை அருகே பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் விஜய் உரையாற்றினார். அவர் பேசியதாவது:
1977ல், “அண்ணாதுரை இருந்த இடத்தில் இப்படிப்பட்டவர்கள் அமரும் நிலை வந்துவிட்டதே” என்று மக்கள் கண்ணீர் வடித்தனர். அந்த கண்ணீரை துடைக்கத்தான் அ.தி.மு.க., துவங்கப்பட்டது என எம்.ஜி.ஆர்., கூறினார். இன்று, “காமராஜர், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., இருந்த இடத்தில் இப்படிப்பட்டவர்கள் அமர்கிறார்கள்” என்று மக்கள் மீண்டும் கண்ணீர் வடிக்கின்றனர். அந்த கண்ணீரை துடைக்கவே த.வெ.க., தொடங்கப்பட்டுள்ளது.
“விஜய்க்கு என்ன அரசியல் அனுபவம் இருக்கிறது?” என்று கேட்கிறார்கள். இதே கேள்விகள் தான் எம்.ஜி.ஆர்., அரசியலுக்கு வந்தபோதும் கேட்கப்பட்டன. அவர் அரசியல் அரிச்சுவடி தெரியாதவர், விளம்பரத்தில் வாழ்பவர், டெல்லிக்கு அஞ்சுபவர் என்று விமர்சிக்கப்பட்டார். ஆனால், அவர் அமோக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தார். அனுபவசாலிகள் என சொல்லிக்கொண்டவர்கள் கோட்டை நாற்காலியை பகல் கனவாகவே பார்த்தனர்.
தங்களை எதிர்த்து யார் நின்றாலும், அவர்களை சிறுமைப்படுத்துவதுதான் சிலரின் வேலை. அரசின் அராஜகங்களையும் ஊழல்களையும் சுட்டிக்காட்டினால், 50 ஆண்டுகள் பழைய தகர டப்பாவை உருட்ட ஆரம்பித்து விடுவார்கள். ஒருபக்கம் தி.மு.க., தலைமையில் சில கட்சிகள், மறுபக்கம் பா.ஜ., தலைமையில் சில கட்சிகள் உள்ளன. ஆனால், எத்தனை சக்திகள் வந்தாலும், தீய சக்தியை வீழ்த்த துாய சக்தி நம்மால் மட்டுமே முடியும்.
“என் கட்சியினரும் அமைச்சர்களும் செய்யும் அடாவடியை பார்க்கும்போது எனக்கு தூக்கம் வருவதில்லை” என்று முதல்வர் ஸ்டாலின் சில ஆண்டுகளுக்கு முன் கூறினார். அவர் ஒருநாள் தூக்கத்தில் எழுப்பி, “யாருக்கு ஓட்டு போடுவீர்கள்?” என்று கேட்டால், அவரை அறியாமலே “விசில்” என்று சொல்லி விடுவார்.
சமீப கால கருத்துக்கணிப்புகளில் பலர் உண்மையைச் சொல்கிறார்கள். சிலர் நம்மீது இருக்கும் வெறுப்பால் கடுப்பு கணிப்புகளை வெளியிடுகின்றனர். பழைய இன்ஜின், ஓட்டை இன்ஜின் என எத்தனை இன்ஜின்கள் வந்தாலும், த.வெ.க., தான் டாப் இன்ஜின். தேர்தலில் மக்கள் ஊதும் விசில் சத்தத்தில், தீய சக்திகளும் ஊழல் சக்திகளும் தெறித்து ஓடும். இவ்வாறு விஜய் பேசினார்.
