வாஷிங்டன்: டில்லியில் அமைந்துள்ள இந்தியா கேட் போன்று, அமெரிக்க தலைநகர் வாஷிங்டன்னிலும் பிரம்மாண்டமான வெற்றி வளைவு ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா சுதந்திரம் பெற்று 250 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு, வாஷிங்டன்னில் 250 அடி உயரம் கொண்ட மிகப்பெரிய வளைவு ஒன்றை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 123 அடி மற்றும் 165 அடி உயரம் கொண்ட இரண்டு வடிவமைப்புகள் தயாரிக்கப்பட்டு டிரம்ப் முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டன. ஆனால், அந்த இரு திட்டங்களையும் அவர் நிராகரித்ததாக கூறப்படுகிறது.
பார்வையாளர்களை அதிகம் கவரும் வகையில், இன்னும் பெரிய அளவில் வளைவு அமைக்க வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், டில்லியில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்தியா கேட் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள டிரம்ப்,
“இந்தியா கேட் ஒரு அழகான வெற்றி வளைவு. ஆனால் அதைவிட எங்களுடையது மிகச் சிறப்பானதாக இருக்கும்,” என குறிப்பிட்டுள்ளார்.
